How to Add a Star Rating Widget in Blogger .txt Displaying How to Add a Star Rating Widget in Blogger .txt.

Saturday, 10 October 2015

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்
இயற்க்கை வளங்கள் கொஞ்சிப் பேசும் ஒரு அழகிய மலையடிவார கிராமத்தில் இணைபிரியா இரண்டு தோழர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதில் கார்முகில் என்பவன் தன்னம்பிக்கை இல்லாமலும், சோம்பேறி தனமாகவும் ஊர் சுற்றுபவன். வணங்காமுடி என்பவன் தன்னம்பிக்கையோடு, சுறுசுறுப்பாக எந்த வேலையையும் மிக அழகாக, திறமையாகச் செய்து முடிக்க கூடியவன். 

ஒருநாள் அவர்களிடம் வயதான ஒருவர் ஒரு இரகசியத்தை கூறினார். "இந்த மலையின் மேற்பகுதியில் காலபைரவி கோயில் ஒன்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைக் காரர்களுக்கு பயந்து நானும், என் மனைவியும் நவரத்தின கற்களை ஒரு வெண்கல பானையில் வைத்து கோயிலுக்கு எதிரில் உள்ள அரசமரத்தின் அடியில் அந்த பானையை புதைத்துவிட்டு வந்தோம். எனக்கு பிள்ளை குட்டிகலென்று யாரும் கிடையாது எனவே நீங்கள் இருவரும் அங்கு சென்று அந்த புதையலை கண்டறிந்து பகிர்ந்துகொள்ளுங்கள்" என்று கூறிச் சென்றார். 

பிறகு அவர்கள் இருவரும் அந்த புதையலை நோக்கி மலையின் மேற்பகுதிக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. தாகத்தை தணிக்க அவர்கள் அங்கும், இங்கும் அலை மோதினார்கள். தாகத்தின் தாக்கத்தால் கார்முகில் "இதற்க்கு மேல் என்னால் வர இயலாது, இவ்வளவு பெரிய மலையில் கோயிலை கண்டறிவதே மிக கடினம் இதில் அந்த புதையலை எப்படி கண்டறிவது. நாம் திரும்பி சென்றுவிடலாம்” என்று கூறினான். 

அதற்க்கு வணங்காமுடி "புதையலை கண்டறியதானே இங்கு வந்தோம். அந்த வேலையை முடிக்காமல் திரும்ப செல்வது கோழைக்கு சமம்" என்று கூறினான். கோவம் கொண்ட கார்முகில் “உன்னால் அதை கண்டறிய இயலுமென்றால் நீ தாராளமாக செல்லலாம். இனி என்னால் ஒரு அடி கூட மேல் நோக்கி செல்ல இயலாது” என்று கூறி திரும்பி சென்றுவிட்டான்.

பிறகு தனியாக வணங்காமுடி மட்டும் அந்த புதையலை தேடிச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு அழகிய நீரோடையைக் கண்டான். ஆனால் காடுகள் அடர்ந்த பகுதியில் அந்த நீரோடைக்கு செல்லும் வழி அவனுக்கு தெரியவில்லை. ஒரு வயதான மூதாட்டியிடம் அந்த நீரோடைக்கு செல்லும் வழியை கேட்டான். அதற்க்கு அந்த மூதாட்டி "அதோ அந்த மாடுகள் செல்லும் வழியில் செல் அந்த நீரோடைக்கு செல்லலாம்" என்று கூறினார். பிறகு அந்த மாடுகளை பின் தொடர்ந்து நீரோடையில் தன்னுடைய தாகத்தை தணித்துக்கொண்டான். 

பிறகு மீண்டும் தன்னுடைய முயற்சியை தொடங்கினான். சிறிது தூரம் சென்றவுடன் அவனுக்கு பசிக்கத் தொடங்கியது. பசியை பொறுத்துக்கொண்டு தன்னுடைய இலக்கை அடைய போராடினான். செல்லும் வழியில் ஒரு மிக பெரிய நாவல் மரத்தை கண்டான். ஆனால் அந்த மரத்தில் ஏறிப் பழங்களை பறித்து பசியாற அவனால் முடியவில்லை. சில குரங்கு கூட்டங்கள் அந்த மரத்தின் மேல் ஏறி கிளைகளை குலுக்கத் தொடங்கின, பழங்கள் குலை குலையாக கீழே விழுந்தன. மகிழ்ச்சியுடன் கீழே விழுந்த பழங்களை உண்டு பசியாறிக்கொண்டு மீண்டும் தனது முயற்சியை தொடங்கினான். வழியில் ஒரு கடைக் காரரிடம் “காலபைரவி” கோயிலை பற்றி விசாரித்தான். அதற்க்கு அந்த கடைக் காரர் "இங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரம் சென்றவுடன் வலது புறம் ஒரு வழி பிரியும் அந்த வழியில் சென்றால் அந்த கோயிலுக்கு செல்லலாம்" என்று கூறினார். 

அதேபோல் அவனும் ஒரு பர்லாங்கு தூரம் சென்று வலது புறமாக பிரியும் வழியை பிடித்து சென்றுகொண்டிருந்தான்; பாதையும் முடிவுக்கு வந்தது ஆனால் எந்த கோவிலும் அங்கு இல்லை. பொழுதும் சாய்ந்து சிறிது சிறிதாக இருள் சூழத் தொடங்கியது. இருந்தும் அவன் மனதை தளரவிடவில்லை; அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். அப்பொழுது ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் அந்த வழியில் வந்துகொண்டிருந்தான். வணங்காமுடி அவனிடன் “காலபைரவி கோயிலை உனக்கு தெரியுமா?” என்று கேட்டான். அதற்க்கு அந்த சிறுவன் “ஓ நன்றாக தெரியுமே... வாருங்கள் நான் அழைத்து செல்கிறேன்” என்று கூறி அவனை அழைத்துச் சென்று அந்த கோயில் இருக்குமிடத்தை காட்டிச் சென்றான். 

தன்னம்பிக்கை இழக்காமல் வணங்காமுடி மேற்கொண்ட விடாமுயற்சியின் பலனாக அந்த புதையல் அவனுக்கு கிடைத்தது. அத்தகைய வெற்றி பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் வழியில் அவனுக்கு உதவி செய்தார்கள். ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இழந்த கார்முகிலனுடைய வாழ்க்கை??? 

எனவே சகோதர, சகோதரிகளே! நாம் தொடங்கும் ஒவ்வொரு செயலையும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் மேற்கொண்டால் வெற்றி இலக்கை அடைவதற்கு இறைவனும் துணைபுரிவான் என்பது மட்டும் உறுதி. 

No comments:

Post a Comment

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe
');