பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.
தமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் "திருக்காவலூர் கலம்பகம்" பாடியுள்ளார்.