நேர்மையை விதையுங்கள்
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் பணமும் தேடிவரும்.
No comments:
Post a Comment